"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கருமலைத்தமிழாழன் கவிதைகள் ஒரு பார்வை

Go down

கருமலைத்தமிழாழன் கவிதைகள் ஒரு பார்வை

Post by karumalaithamizhazhan on Tue Dec 02, 2014 6:18 am


 
 
பாவலர் கருமலைத்தமிழாழன் கவிதைகள்
ஒரு பார்வை
- கருமலைப் பழம் நீ
 
            பாவலர் கருமலைத்தமிழாழன் மிகச் சிறந்த மரபுக்கவிஞர். அன்று குயில், காஞ்சி, கண்ணதாசன் போன்ற இதழ்களிலிருந்து இன்று தமிழகத்திலிந்தும் அயலகங்களிலிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் எண்ணற்ற இதழ்களில் இவரின் மரபுக்கவிதைகள் கண்மலர்ந்து தமிழுக்குப் பெருமை சேர்க்கின்றன.
            கிருட்டிணகிரியில் (கருமலை) 16.07.1951இல் பிறந்த இவர் அண்மையில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்றிருக்கிறார். நானும் தம்பி, கருமலைத்தமிழாழனும் கருமலையில் 1965-70களில் ஓவியக்கவிஞர் பெருமாள்ராசு ஐயா, மற்றும் புலவர் இராமானுசம் ஐயா அவர்களின் சங்கத்தமிழ் அரவணைப்பில் சுதந்திரமாகப் பறந்து திரிந்து கவிதை வானை வட்டமிட்டவர்கள். இவரின் முதல் கவிதை 1969இல் குயில் இதழில் வெளிவந்தது. அப்பொழுது இவர் கிருட்டிணகிரி கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
            இப்பொழுது நெஞ்சின் நிழல்கள், மலர்விழி, காற்றை மணந்த கவிதைகள், காவியத்தலைவன், ஒப்பனைப்பூக்கள், நீர்க்கால்கள், மண்ணும் மரபும், வீணை மத்தளமாகிறது, மரபின் வேர்கள், புதிய குறுந்தொகை, வேரின் விழுதுகள், சுவடுகள், உன்முகமாய் இரு போன்ற இருபதிற்கும் மேற்பட்ட கவிதை நூல்களின் படைப்புகளால், உன்னத பரிசுகளும், சிறப்புகளும் பெற்று ஓங்கு தமிழ்க் கவிஞனாக உலா வந்து கொண்டிருக்கிறார்.
            தனக்கென்று ஒரு கொள்கை வகுத்துக்கொண்டு அதை எதற்காகவும், யாருக்காகவும், சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று வாழ்ந்து வருபவர் என்பதை அவரின் இந்த வரிகளே நமக்குக் காட்டும்.
“என் சுயத்தை  யாருக்காய் இழக்க வேண்டும்
            என் வழியை யாருக்காய் மாற்ற வேண்டும்
என் குறிக்கோள் என்கொள்கை அடைவ தற்கே
            எவர் தடையாய் நின்றாலும் தகர்த்த ழிப்பேன்!”
உன் முகமாய் இரு (பக் 59) என்றும்
 
            “ஏறுபோல தீமைகளை எதிர்த்தி டாமல்
                        எச்சில்நாய் போலிருக்க முடியா தென்னால்” (உ.இ. பக் 59)
 
என்றும் தன்சுயம் கெடாமல் சொந்த முகத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் கொள்கைப் பிரகடனமாய்ப் பாடியிருக்கிறார்.
            தன் பெயருக்கேற்பத் தமிழையே தம் உயிராகக் கொண்டிருப்பவர். தனித்தமிழ் இதழ்களை நூலகங்களில் இடம்பெறச் செய்ய 1972இல் மறுப்பு தெரிவித்த தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலரை எதிர்த்த போராட்டத்தில் தன்னுடைய தமிழாசிரியர் பணியையே இழந்தவர். தமிழ்மொழியின் வளர்ச்சியே தமிழரின் வளர்ச்சி என்று எண்ணி மொழிப்பற்றில்லா தமிழர்க்குத் தம் கவிதைகளால் தமிழ்ப்பற்றை ஊட்டியவர்.
            “செந்தமிழா நான்என்ன சொல்லிவிட்டேன்
                        செவ்வரளி விதைதனையா தின்னச் சொன்னேன்
             சொந்தமொழி தமிழினிலே கல்வி கற்றால்
                        சுயசிந்தை பேரறிவு வளரு மென்றேன்” (நீர்க்கால்கள்-பக்5) என்று தமிழ்க் கல்வியே தமிழரை முன்னேற்றும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
            தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் தமிழரைச் சொற்களில் கனலேற்றிச் சுடுகிறார்.
                       
                        “அம்மாவை மம்மியென்றே
                         அழைப்போரின் நாவறுப்பேன் துண்டுசெய்வேன்
                         செம்மொழியை ஏளனமாய்ச்
                         செப்புவோனின் தலைகொய்வேன் புதைத்திடுவேன்” (வீ.ம.பக் 22)
எனக் கூறும் இவர் தமிழ்மொழிக்குத் தீங்கிழைக்கும் தமிழர் மீது தன் சினத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
                        “தீங்கிழைக்கும் தமிழரினைச் சாட்டை யாலே
                                    திருந்துமட்டும் அடித்தால்தான் தமிழைக் காப்பர்” (வீ.ம.பக் 23)
 
            மொழியைக் காக்க முற்படும் கவிஞர் அதைப்போலவே சமுதாயத்தைக் காக்கவும் துடித்தெழுகிறார். அவர் வாழும் பகுதியில் (தருமபுரி, கிருட்டிணகிரி) பெண்சிசு கொலைகள் அதிகமாக நடப்பதை எண்ணி எண்ணிக் குமுறுகிறார். அந்தக் குமுறல்கள் கவிதைகளாக வெளிவருகின்றன. பெண்குழந்தை தாயைப் பார்த்து இவ்வாறு கேட்கிறது.
                        “கற்கண்டு நீரெடுத்துக்
                                    கனிவாகத் தருதல்போல்
                         கள்ளிப்பால் கரமெடுத்துக்
                                    கண்ணிரேன் காட்டுகிறாய்
                         சத்தான பாலென்று
                                    சமுதாயம் சொல்லியதோ
                         சித்தர்தம் பாட்டுரைக்கும்
                                    சிறப்பான மூலிகையோ!” (வீ.ம.பக் 47)
எனக் கேட்டு இந்த இழிநிலைனயைப் போக்கப் பெண்களால்தான் முடியும் என்பதை
                        “நெருப்பாகும் வாழ்வென்னும்
                                    நெருடலிலே செயும்தாயே
                         நெருப்பாக மாறுதற்கே
                                    நெரிக்காமல் வாழவிடு
                         அடிமையராய் இங்குலவும்
                                    அவலத்தால் செயும்தாயே
                         அடிமையெனும் தளையுடைக்க
                                    ஆர்த்தெழவே வாழவிடு” (வீ.ம. பக் 47)
எனத் தம் கவிதைகளில் வழியையும் காட்டுகிறார்.
 
            பெண்களை அடிமைகளாகவும், தங்களின் கைப்பாவைகளாகவும் வைத்திருக்கவே ஆண்கள், புகழ்மொழியில் அவர்களைச் சிந்திக்கவிடாமல் செய்து மயக்கத்தில் தம்முடைய விருப்பத்திற்கேற்ப ஆட்டிவைக்கிறார்கள் என்பதை இவ்வாறு கூறி ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே இது என்றும் உணர்த்துகிறார்.
                        “மங்கையுன்னைப்  பதுமையென்றார்  பொம்மை  போல
                                    மனையுள்ளே  இருக்கவேண்டும்  என்ப  தற்கே
                         மங்கையுன்னை  மலரென்றார்  அழகு  காட்டி
                                    மனைபோதைப்  பொருளாகக்  கிடப்ப  தற்கே
                         மங்கையுன்னைக்  கொடியென்றார்  ஆணைச்  சுற்றி
                                    மனையுள்ளே  சுயமிழந்து  படர்வ  தற்கே
                         மங்கையுன்னை  அன்னமென்றார்  தலைகு  னிந்து
                                    மனையுள்ளே  நடைபயில  வேண்டு  மென்றே!” (வீ.ம. பக்-36)
 
நீண்ட காலமாகப் பெண்களை அடக்கி, ஒடுக்கி அவர்களுக்குள்ளேயே தாழ்பு மனப்பான்மையை இச்சமுதாயம் உருவாக்கி வைத்துள்ளது. அவர்களுக்குள்ளே இருக்கும் எழுச்சியை அவர்கள் அறியாமலே இருக்கிறார்கள். அந்த எழுச்சியைத் தட்டி எழுப்புகிறார் கவிஞர்.
                        குளிர்நிலவே எனப்புகழும்
                                    குயில்மொழிக்கு மயங்காதே
                        குளிரெரிக்கப் புறப்பட்ட
                                    குங்குமத்தின் தீக்கதிர் நீ - என்றும்
                        தாய்மைக்கு வித்தென்னும்
                                    தவிப்பினிலே புதையாதே
                        பேய்மைக்கு மண்பிளக்கும்
                                    பிரளயத்தின் விருட்சம் நீ (வீ.ம.பக் 41)
என்றும் பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்.
 
            இன்றைய சமுதாயச் சீரழிவிற்கும், அவலத்திற்கும் காரணம் நாம்தாம். நமக்கென்ன என்று எல்லோரும் ஒதுங்கி இருப்பதால்தான் கயமைகளே இங்கு நாட்டாமை செய்கிறது. எதிர்க்கின்ற துணிவின்றிக் கோழைகளாக இருப்பதால்தான் வன்முறைகள் இங்கே  கோலோச்சுகின்றன. ஒவ்வொருவரும் தம்முடைய பொறுப்பினை உணர்ந்து செயல்பட்டால்தான் இச்சமுதாயம் மேம்பட்ட சமுதாயமாக ஓங்கும் என்று உணர்த்துகிறார்.
                        “புல்லர்க்கு வழிவிட்டுப் புறத்தே நின்றால்
                                    புல்கூட நம்காலைப் புரட்டி வீழ்த்தும்
                         பொல்லாமை கண்டஞ்சி மௌன மானால்
                                    பொய்புரட்டே மேடையேறி வீரம் பேசும்
                         நல்லவர்கள் வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டால்
                                    நரிகளிங்கே நாடாளும் தலைவ ராகும்
                         வல்லடிமை நினைவகற்றித் துணிவு பெற்று
                                    வந்தால்தான் நல்லவையும் நடக்கு மிங்கே!” (வீ.ம.பக் 80)
என்று ஒற்றுமையாகக் கைகோர்த்தால் ஓடாரோ தீயவர்கள் என ஒன்று சேர அழைப்பு விடுக்கிறார்.
 
            நம் முன்னோர்கள் வளர்த்து பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்த இயற்கை அன்னையை அணு அணுவாக இன்று நாம் சித்தரவதை செய்து கொண்டிருக்கிறோம். இயற்கையின் எழிலை, தூய்மையை அழித்துக் கொண்டிருக்கிறோம். நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பதைத் தெரியாமலேயே இச்செயலைச் செய்வதால் வருங்கால நம் சந்ததிக்குப் பெருங்கேட்டினை விதையாக விதைத்திருக்கிறோம். அந்த நச்சு விதை நம் எச்சத்தையே நிர்மூலமாக்கி விடும் என்று எச்சரிக்கிறார்.
                        “முன்னோர்கள் தூய்மையாக வைத்தி ருந்த
                                    மூச்சிழுக்கும் காற்றினிலே நஞ்சை சேர்த்தோம்
                         முன்நின்று காற்றிலுள்ள அசுத்தம் நீக்கும்
                                    முதலுதவி மரங்களினை வெட்டிச் சாய்த்தோம்
                         பொன்கதிரை வடிகட்டி ஒளிய னுப்பும்
                                    பொற்கவச ஓசோனை ஓட்டை செய்தோம்
                         என்னவைத்தோம் சந்ததிக்கே தன்ன லத்தால்
                                    எல்லாமும் கலப்படத்தால் கெடுத்து வைத்தோம்!” (வீ.ம. பக் 91)
 
            தான் இளமையிலே வாழ்ந்த அந்த வனப்பு மிக்க கிராமம் மடி வற்றிய பசுவைப்போல காய்ந்து போனதோடு, கொஞ்சிக் கொஞ்சி சுற்றி வந்து நெஞ்சில் குதூகலத்தை நிரப்பி வைத்த ஆடு, மாடு, கோழிகளும், பச்சைப்பட்டாய் விரிந்திருந்த பசும் வயல்களும், பரந்த ஏரி, குயிலின் தோப்புகளும் இன்று கண்முன்னே வெறுமையாகிப் போனதுவே என்ற ஏக்கத்தை ஓவியமாய் நம் கண்முன்னே காட்டுகிறார்.
 
                        “குருவிகளின் கூடுகளும் கீச்கீச் சென்று
                                    குலவுவதும் மரத்தினிலே கொத்திக் கொத்தி
                         அருங்கிளிகள் விட்டபழம் சுவையே யென்று
                                    அணில்கடித்துத் தின்னுவதும் செடியில் பூத்து
                         அருகழைக்கும் வாசமலர் அழைப்பை ஏற்று
                                    அழகாகப் பறந்துவரும் பட்டாம் பூச்சி
                         கருவண்டின் ரீங்காரம் தும்பிக் கூட்டம்
                                    கவிதைக்குள் கிராமத்தைப் புதைத்த தின்று!” (நீர்க்கால்கள் பக் 141)
 
            சலசலக்கும் சிக்றோடையும், குளிர்ந்த தூய காற்றை அள்ளித்தந்த தோப்புகளும், கால்நீட்டி, கைவீசி நடக்கின்ற வகையில் அகன்ற தெருக்களுமாக இருந்த கிராமம் வளர்ச்சி என்ற பெயரால் எப்படியெல்லாம் மாறிவிட்டது என்பதை இவ்வாறு எள்ளலுடன் கூறுகிறார்.
 
                        “காற்றுவர வழியில்லை கழிவு நீரின்
                                    கால்வாயோ நடுத்தெருவில்; வாக னங்கள்
                         சீற்றமுடன் கக்குகின்ற புகையின் மாசு
                                    சிறுநீரால் நனைந்திருக்கும் சுவர்கள் வாசம்
                         மாற்றங்கள் வளர்ச்சியென மனிதன் தன்னின்
                                    மனிதத்தை இழந்ததுபோல் இயற்கை தந்த
                         ஊற்றுகளை அடைத்தின்று செயற்கை யேற்றே
                                    ஊனமாகி வீழ்கின்றான் புதுமை என்றே!” (சுவடுகள் பக் 45)
-       என நரகமாக மாறிவிட்ட நகரத்தைக் காட்டுகிறார்.
 
            அடுத்த வீட்டில் இருப்பவர்கள் மட்டுமன்றி மொத்த  கிராமத்தையும் அறிந்து வைத்திருந்தவர்களின் வழியில் வந்தவர்களோ எந்திரமாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில் எதிர் வீட்டில் இருப்பவர்கள் கூட யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடுத்த நாடுகளின் செய்திகளைப் பேசுவதில் மட்டும் வல்லவர்களாக இருக்கிறார்ர்கள். இந்த முரணை மிக லாவகமாகக் கவிஞர் காட்டுவதைப் பாருங்கள்.
                        “அடுத்த வீட்டில் வறுமைதனில் துடிது டித்தே
                                    அலறுகின்ற ஒலிகேட்க நேர மின்றி
                         அடுத்துள்ள நாடுகளின் அழகைப் பற்றி
                                    அடுக்கடுக்காய் மேடைகளில் பேசு கின்றோம்
                         நடுத்தெருவில் எச்சிலுக்காய் சண்டை போடும்
                                    நாய்களெனத் தன்னலத்தால் மோதிக் கொண்டு
                         மிடுக்காகச் சமத்துவத்தின் பெருமை பற்றி
                                    மினுமினுக்கும் சொற்களிலே பேசு கின்றோம்!” (வே.வி.பக்கம் 151)
 
            பொருளாதார நெருக்கடியால் கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் சராசரி குடும்பப் பெண்களின் மனங்களில்தாம் எத்தனை எத்தனை ஆசைகள். விடிவதற்கு முன்னெழுந்து வீட்டு  வேலைகளைச் செய்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கேயும் உழைத்துவிட்டு மீண்டும் அடுப்படியில் உழல வேண்டும். குழந்தைகளைப் பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ எண்ணிப் பார்க்கக் கூட நேரமில்லை. கணவனுடன் அன்பாக இரண்டு வார்த்தைகள் பேசுதற்கும் முடியவில்லை என்று ஏங்குவதை இவ்வாறு காட்டுகிறார் கவிஞர்.
 
                        “பெற்றெடுத்த குழந்தைக்கோ ஆசை தீர
                                    பெருகிவரும் பால்கொடுக்க முடிய வில்லை
                         பற்றியகை கணவனுடன் குடும்பம் பற்றிப்
                                    பாசமுடன் பேசுதற்கும் இயல வில்லை!” (வீ.ம. பக் 51)
என ஏங்குகின்ற இந்த வாழ்க்கை குளிர்பதன அறைக்குள்ளே இருந்தாலும் சிறைக்கூடமாகத் தெரிகிறதாம் அவர்களுக்கு.
 
                        நடிக்கின்ற நாகரிகப் பெண்ணாய் மாறி
                                    நாளெல்லாம் எந்திரமாய்ச் சக்கையாகும்
                        குடித்தனமோ குளிர்பதனச் சிறையின் கூடம்
                                    குமுறுதற்கும் பொழுதில்லா நகர வாழ்க்கை! (வீ.ம. பக் 51)
 
            ராபிச்சை, பகல்பிச்சை எனப் பிச்சைகளிலே பலவிதம். கோயில் வாசல்களில், பேருந்து நிலையங்களில், கடை தெருக்களின் முனைகளில் பலவித வேடங்களில் பரிதாபக் குரல்களில் கையேந்தும் பிச்சைக்காரர்களைப் பார்க்கிறோம். சமுதாயத்தில் இன்று எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கையூட்டைக் கவிஞர் அதிகாரப்பிச்சை எனக் காட்டுகிறார்.
                        “அரசாங்க அலுவலக அறையின் உள்ளே
                                    அமர்ந்தபடி இருக்கின்ற பிச்சைக் காரர்
                         வரம்கொடுக்கும் கடவுளெனும் தோற்றத் தோடு
                                    வருவோர்க்குக் காட்சியினைத் தருகின் றார்கள்
                         குரலினிலே அதிகாரம்; மிரட்டும் கண்கள்
                                    குறிப்பிட்ட தொகைதன்னை உறையில் போட்டுக்
                         கரங்களிலே கொடுத்தால்தான் நகரும் கோப்பு
                                    கட்டாயப் பிச்சையினால் கொதிக்கும் நெஞ்சு!” (உ.மு.இரு. பக் 109)
 
            பெண்கள் அறிவியலின் அறிவைப் பெற்றுக் கோள்களேறி விண்சுற்றி வந்தபோதும், பெரும்பதவி தனிலமர்ந்து அதிகாரம் செலுத்தும்போதும், பெண்ணுரிமை எனப்பேசிப் போராட்டங்கள் நடத்தும் போதும் வரதட்சணைக் கொடுமையாலே ஸ்டவ் வெடிக்கும் நிகழ்ச்சிகளும், மாமியாரின் கொடுமையாலே வீட்டைவிட்டு வெளியேறும் நிகழ்ச்சிகளும் அன்றாட செய்திகளாக செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆனால் தன்னை எரிக்கும் கணவன் வீட்டாரை எரித்துப் புதுமை செய்யும் பெண்ணாக கவிஞர் நமக்குக் காட்டும் புதுமையாலே சமுதாயத்தை எச்சரிக்கிறார்.
                       
                        “விடிகாலை சமயலறை உள்ளே சென்று
                                    வீட்டிலுள்ள எரிவாயு கசிய வைத்தே
                         அடிக்குரலில் வீறிட்டே அலறி வீட்டின்
                                    அனைவரையும் அறைக்குள்ளே வரவ ழைத்தாள்
                         நொடிப்பொழுதில் அறைமூடி வெளியே வந்து
                                    நெருப்புதனைச் சன்னலிலே தூக்கிப் போட்டாள்
                         முடிந்ததுவே கொடுமையெனப் புதுமைப் பெண்ணாய்
                                    முகம்மலர்ந்து வெளியேறிப் புரட்சி செய்தாள்!” (உ.மு.இ.பக் 113)
 
            சோம்பல்தான் ஒருவனை முடமாக்குவது. தன்னம்பிக்கை இல்லாத கோழைத்தனம்தான் நம்மால் முடியாது என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்துவது. இத்தகையோனை சமுதாயம் ஏளனமாகப் பார்க்கும் என்றுதான் ஏனையோர்கள் கூறுவார்கள். ஆனால் இவரின் பார்வையைப் பாருங்கள்.
                        “நடக்காதான் கால்களிலே சிலந்தி கூட
                                    நாக்காலே வலைதன்னைக் கட்டப் பார்க்கும்
                         முடங்கிமூலை சோம்பலிலே மூழ்கி ருந்தால்
                                    முதுகேறி எறும்புகூட எள்ளல் செய்யும்” (சுவடுகள் பக் 14)
என்று உழைக்காதவனை சிறுபூச்சி, புழு கூட மதிக்காது என்பதை எவ்வளவு அருமையாக சுட்டிக் காட்டுகிறார்.
            வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. வாய்ப்புகள் நம்மைத்தேடி வராது. வாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இயற்கை நாளும் இப்பாடத்தை நமக்குக் கற்றுத்தருவதை நாம் காணாமலே இருக்கிறோம்.
                        பூந்தென்றல் விதியுலா
                                    புறப்பட்டு வருவதற்கே
                        ஏந்திவரும் பல்லக்கை
                                    எதிர்பார்த்தா காத்துள்ளது?
                        காரிருளை மாய்ப்பதற்குக்
                                    கதிரவன்தான் காலைவர
                        தேரினையா எதிர்பார்த்துத்
                                    தெருமுனையில் காத்துளது! (வீ.ம. பக் 120)
என இயற்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றும் யாரையுமே எதிர்பார்க்காமல், யாருடைய துணைக்காகவும் காத்திராமல் தானாக செயல்படுவதைக் காட்டி நாமும் அதுபோல உழைக்க முன்வந்தால் வானமே நமக்கு வசப்படும் என்பதை
                        வாய்ப்புகள் உனைத்தேடி
                                    வரவேற்பு கொடுக்காது
                        வாய்ப்புகளை உருவாக்கு
                                    வானம்உன் கைகளுக்குள் (வீ.ம. பக் 120)
என்று கூறுவதின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுகிறார். வாழ்க்கையின் இரகசியமே இதுதான் என்று புரிய வைக்கிறார்.
            வெற்றி, தோல்வி குறித்த இவரின் பார்வை நம்மை வியக்க வைக்கிறது. பகைவனை வெட்டி வீழ்த்தும் வீரத்தால் பெறுவதுவா வெற்றி? அடுத்தவனை வஞ்சகத்தால் வீழ்த்துவதா வெற்றி? உடல்வலிமையால் வலிமையற்றவனை வீழ்த்துவதா வெற்றி! இல்லை இல்லை பின் எதுதான் வெற்றி.
                        “கன்னலெனும் மொழிபேசிக் கரவு நெஞ்சால்
                                    கன்னக்கோல் வைத்துயர்தல் வெற்றி யன்று
                         அன்பாலே பகைமையையும் நட்பாய் மாற்றி
                                    அரவணைத்து வாழ்வதுவே சிறந்த வெற்றி!” (உ.மு.இ. பக் 75)
என வெற்றிக்கு இலக்கணம் கூறும் இவர், எது தோல்வி என்பதற்கும் புதிய விளக்கத்தைத் தருகிறார்.
                        “பிழைப்பதற்கு முயலாமல் பிறிதோர் கையின்
                                    பிச்சைக்காய் தலைகுனிதல் வாழ்வின் தோல்வி
                         உழைக்காமல் பிறர்பொருளைச் சுரண்டி வாழ
                                    உள்ளத்தில் எண்ணுவதே பெருத்த தோல்வி!” (உ.மு.இ. பக் 75)
எனப் புதிய நோக்கிலே மிக எளிமையான வழியிலே எல்லோர்க்கும் புரியும் வகையிலே கவிஞர் நம் மனத்தில் பதிய வைக்கிறார்.
            மதம் பிடித்த யானைக்கு ஒப்பானவர்கள் மதவெறியாளர்கள் என்பதை இன்று கண்முன்னே கண்டு கலங்கி நிற்கிறோம். மதங்கள் இன்று மனிதனை, மனிதநேயத்தை வளர்க்கவில்லை. மதங்களின் பெயரால் வன்முறைகளும், குண்டுவெடிப்புகளும் தலைவிரித்தாடி தெருக்களினைக் குருதியிலே குளிப்பாட்டுகின்றன. அமைதியை விரும்பும் எந்தக் கவிஞனின் உள்ளத்தையும் இந்த நிகழ்வுகள் சோகத்தை நிரப்பிவிடும். கறுப்பு மனங்களின் நெருப்பு செயல்களைக் கண்டிக்காத கவிஞர்களும் இருப்பாரோ! நம் கவிஞரின் கனல்வரிகளைக் கேளுங்கள்.
                        “குக்கல்கள் ஒற்றுமைக்கா உவமை யாகும்
                                    குறுமனத்து மதவெறியா அமைதி ஈயும்...
                         வெடிக்கின்ற குண்டாலா விடியல் பூக்கும்.
                                    வேடிக்கை நிகழ்ச்சிகளா சரித மாகும்.
                         கடிக்கின்ற பாம்புகளா நல்ல பாம்பு
                                    கனவுகளா பகற்பொழுதின் செயல்க ளாகும்
                         முடியட்டும் வன்முறைகள் மக்கள் நெஞ்சில்
                                    முகிழட்டும் மனிதநேயம் குமுகம் வாழும்.” (உ.மு.இ. பக் 143)
எனச் சமூக அக்கறையுடன் பாடுவதோடு, இந்த அவலங்கள், கயமைகள், ஒழிய வேண்டுமென்றால் நாம் என்ன  செய்ய வேண்டும்? மதக் காழ்ப்புகளை எவ்வாறு போக்க வேண்டும். நல்லிணக்கத்தை உருவாக்குவது எப்படி என்பதற்கு அருமையான தீர்வினைத் தருகிறார்.
                        நற்குர்ரான் ஓதுகின்ற பள்ளி வாசல்
                                    நடுவினிலே தேவாரம் ஓத வேண்டும்
                        பொற்புடைய பாசுரங்கள் தேவாலயத்துள்
                                    பைபிளுடன் இனிமையாகப் பாட வேண்டும்
                        பெற்புயர்ந்த சிவதிருமால் கோவி லுக்குள்
                                    ஏசு அல்லா புகழ்பாடல் ஒலிக்க வேண்டும்
                        அற்புதமாய் மும்மதத்தார் மூவி டத்தும்
                                    அனைத்துமதக் கடவுளரை வணங்க வேண்டும்!
 
இந்த நிலை உருவானால் மதங்களின் பெயரால் மனிதர்கள் இல்லாமல் மனிதம் பெயரில் மனிதர்கள் திகழ்வார்கள்.
 
            காதலினைப் பாடாத கவிஞனும் உண்டோ? நம் கவிஞரும் அதற்கு விதிவிலக்கல்ல. காதல் தானே ஒருவனைக் கவிஞனாக மாற்றுகிறது. கவின்மிகு காட்சிகளும், கற்பனை ஓவியங்களும் காதல் கவிதைகளில் தானே காண முடியும்.
                        கச்சை நகில்மூடிக் காணும் விழியீர்த்தே
                        இச்சை பெருக இடையசைத்தாய் - நச்சிமனம்
                        அன்ன நடைபின்னே அன்பு குடைபிடித்தேன்
                        என்னைக் குழைவாகத் தைத்து!
 
                        கண்திறந்த போதே வரும்கனவு நாயகியே
                        என்னிதய ஏக்கத்தை எண்ணிப்பார் - உன்மீது
                        வீசுமிளங் காற்றுவந்து பட்டாலும் என்மேனி
                        தீசுமந்து போவதுதான் ஏன்! (நீர்க்கால்கள் பக் 118)
 
            பொதுவாகவே படைப்பாளியின் உள்ளம் சில நேரங்களில் காட்டாறு போலவும், சில பொழுதுகளில் அமைதியான நதியைப் போலவும் மாறும் இயல்பு கொண்டது. ஒரு கவிஞனின் அடையாளத்தை ஆடைகளால் அல்ல அவனின் படைப்புகளால்தான் காணமுடியும்.
            படைப்பாளி என்பவன் வானுக்கும், பூமிக்குமாய் ஓங்கி நிற்பவன். மனித நேயத்தைப் போற்றி வளர்ப்பவன். மாமழைபோல் பூமிக்குப் பயன்படுபவன். கவிதை சோறு போடுகிறதோ இல்லையோ.... .  சமூகத்தைச் சீராக்கிப் புதியதொரு அவதாரம் எடுக்க வைக்கும்.
            அந்த வகையில் பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள் ஒவ்வொன்றும் மண் பயனுற மலர்ந்தவை எனலாம். மகத்தான மானுடத்தை எழுப்பவல்ல ஆற்றலைக் கொண்டவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சுவடுகளை மேன்மேலும் பதிக்கட்டும். சிறக்கட்டும். இலக்கண வேலிக்குள் புள்ளிமானாய்த் துள்ளி திரியட்டும். இன்னும் பல நூல்களால் தமிழன்னைக்கு அணி சேர்க்கட்டும் என வாழ்த்துகிறேன்.
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum