"நந்தலாலா" - பாடல் விமர்சனம்;

இளையராஜா எனும் இசை யானை, மலை மேல் ஏறி துதிக்கை உயர்த்திப் பிளிறி, தன்
ஆளுமையைப் பறை சாற்றி இருக்கிறது, "நந்தலாலாவின்" ஒவ்வொரு ஒலிக்
குறிப்பிலும் !

ஒரு சுற்றுலாவின் குதூகலத்தோடு புறப்படும் "மெள்ள ஊர்ந்து ஊர்ந்து..." பாடல் ஊர்வல உற்சாகம்.

"ஒண்ணுக்கொண்ணு துணையிருக்க உலகத்திலே..." என்று ஆரம்பிக்கும் ஜேசுதாஸ்,
"அன்பு ஒண்ணுதான் அநாதையா?" என்று கேட்கும்போது ஆரம்பிக்கும் மனப் பிசைவு
பாட்டின் இறுதி வரை தொடர்கிறது.

"தாலாட்டு கேட்க நானும்..." ராஜாவின் டிபிக்கல் அம்மா கேவல்.

உற்சாகமான, குடும்ப மெலடி
"கை வீசி நடக்கிற காற்றே". (இதையும், இளையராஜா
குழந்தையாகவே குதூகலப்படுத்தும் "ஒரு வாண்டுக் கூட்டமே" பாடலையும் படத்தில்
நீக்கியிருப்பதாகச் சொல்கிறது குறிப்பு. வாண்டு பாட்டுக்கு கபிலனின்
வாத்சல்யமான வரிகளும் அழகு !)

அப்புறம் "எலிலே...எலிலே...! " என்கிற அந்தக் குறவர் பாடல்.... என்ன
சொல்வது ! சரோஜா அம்மாள் என்பவர் உடுக்கு அடித்துப் பாடியிருப்பது உலுக்கி
எடுக்கிறது.

நன்றி: ஆனந்த விகடன், 28.01.2009